20 வயதுக்குட்பட்டோருக்கான (யு-20) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியா அணி சாம்பியன் ஆனது. முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றிருக்கும் செர்பியா புதிய வரலாறு படைத்துள்ளது.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்க, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் மேக்ஸிமூவிச் கோலடிக்க, செர்பியா 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது.
பிரேசிலுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் பிரேசில் அணியே ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே தலா ஒரு கோல் வாய்ப்பு நழுவியது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் செர்பியாவின் நெமன்ஜா மேக்ஸிமூவிச் கோல் கம்பம் அருகே பந்தை கிராஸ் செய்தார். அதை சரியாகப் பயன்படுத்திய அந்த அணியின் மற்றொரு வீரரான ஸ்டானிஸா மேன்டிச் கோலடித்தார். அதனால் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
எனினும் இந்த முன்னிலை நீண்டநேரம் நீடிக்கவில்லை. 73-வது நிமிடத்தில் பிரேசிலின் மாற்று ஆட்டக்காரர் ஆண்ட்ரியாஸ் பெரைரா மிக அற்புதமாக கோலடிக்க, ஸ்கோர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. இதன் பிறகு இரு அணிகளும் போராடிப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை.
அதைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் 118-வது நிமிடத்தில் செர்பியாவின் வெற்றிக் கோலை அடித்தார் நெமன்ஜா மேக்ஸிமூவிச். கடந்த 4 உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டங்களிலும் கூடுதல் நேரத்தில்தான் வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செர்பிய கேப்டனும், கோல் கீப்பருமான பெட்ராக் ராஜ்கோவிச் இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். அவர் பிரேசிலின் பல கோல் வாய்ப்புகளை அற்புதமாக முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 1987-ல் யூகோஸ்லேவியா சாம்பியன் பட்டம் வென்றபோது அந்த நாட்டுடன் இணைந்திருந்தது செர்பியா. சுதந்திரம் பெற்ற பிறகு 20 வயதுக்குட்பட் டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியா சாம்பியனாவது இதுவே முதல் முறையாகும்.
மாலிக்கு 3-வது இடம்
முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மாலி அணி 3-1 என்ற கோல் கணக்கில் செனகல் அணியைத் தோற்கடித்தது.
No comments:
Post a Comment