ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக, ரஹானே தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சில ஆச்சரியங்கள் அடங்கியுள்ளன.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ஜூலை 10-ல் தொடங்குகிறது. மூன்று ஒருநாள் போட்டிகளும், இரண்டு ட்வென்டி 20 போட்டிகளும் இதில் அடங்கும்.
கேப்டன் தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு இளம் வீரர் ரஹானே தலைமை தாங்குகிறார்.
அதேவேளையில், மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் மூத்த பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா ஆகியோர் இந்திய ஒருநாள் அணிக்குத் திரும்புகின்றனர்.
ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு இயக்குநராக ரவி சாஸ்திரி இல்லை. எனினும், சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய பயிற்சிக் குழுவுடன் புறப்படுகிறது இந்தப் படை.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல், "உங்களைப் போலவே வங்கதேசத்தில் இந்திய அணியின் ஆட்டத்தில் எங்களுக்கும் மகிழ்ச்சி இல்லை. எழுச்சியை நோக்கி பயணிக்க வேண்டும்" என்றார்.
அணியில் எவ்வித சச்சரவும் இல்லை என்றும், தோனியின் விலகல் பற்றியெல்லாம் எதுவும் பேசப்படவில்லை என்றும் கூறிய அவர், "கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவேதான் ரஹானே கேப்டன் ஆனார்" என்றார்.
இந்திய அணி விவரம்:
ரஹானே (கேப்டன்), முரளி விஜய், ராயுடு, மனோஜ் திவாரி, கேதார் ஜாதவ், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, ஹர்பஜன் சிங், அக்சர் படேல், கார்ன் சர்மா, தவால் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஷ்வர் குமார், மோஹித் சர்மா, சந்தீப் சர்மா
திராவிட் வழிகாட்டுதலில் 'இந்திய ஏ' அணி
ஆஸ்திரேலியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுடன் மோதும் இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு புஜாரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 19 முதல் தொடங்கும் இந்த முத்தரப்புத் தொடரில், இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் இருப்பார்.
இந்திய ஏ அணி விவரம்: புஜாரா (கேப்டன்), கே.எல்.ராகுல், அபினவ் முகந்த், கருன் நாயர், ஸ்ரேயஸ் ஐயர், நமான் ஓஜா, விஜய் சங்கர், அமித் மிஸ்ரா, பிரக்யன் ஓஜா, ஷர்துல் தாகூர், வருண் ஆரோன், அபிமன்யு மிதுன், உமேஷ் யாதவ், ஸ்ரேயஸ் கோபால், பாபா அபரஜித்
No comments:
Post a Comment