விஜய் நடித்து முடித்திருக்கும் ’புலி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்துகொண்டிருக்க அவரது 59ஆவது படத்துக்கு இன்று காலை பூஜை போடப்பட்டது.
லண்டனில் குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடிவிட்டுத் திரும்பியிருக்கும் விஜய் இந்தத் தொடக்க விழாவுக்கு வேட்டி-சட்டை அணிந்துவந்து அசத்தினார். விஜய்யின் பெற்றோரான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் பாடகி ஷோபனா, விழாவில் பங்கேற்றனர்.
இளம் இயக்குனர் அட்லி இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் மற்றும் சம்ந்தா நடிக்கின்றனர். புலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தோன்றும் நடிகர் பிரபு இந்தப் படத்திலும் விஜய்யுடன் இணைகிறார். அதோடு நடிகை மீனாவின் மகள் இந்தப் படத்தில் விஜய்யின் மகளாக நடிக்கவிருக்கிறார். மீனா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக திரையுலகுக்கு அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு மூத்த இயக்குனர் மகேந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
செய்தியாளர்களுடன் பேசிய இயக்குனர் அட்லி “விஜய் என் கனவு நாயகன். ’நண்பன்’ படத்தில் ஷங்கர் சாரின் உதவியாளராக விஜய்யுடன் பணியாற்றினேன். ஆனால் ஒரு இயக்குனராக வெற்றிப் படம்,
கொடுத்துவிட்டுதான் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் ’ராஜா ராணி’ வெற்றிக்குப் பின் விஜய்யை சந்தித்து கதை சொன்னேன். முதல் படத்துக்கே என்னிடம் வந்திருக்கலாமே என்று கேட்டார்”
படம் குறித்துப் பேசும்போது :”இது ஒரு ஆக்ஷன் கதை,.இதில் விஜய்யின் பாத்திரம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். ரீமேக்கெல்லாம் இல்லை.நான் எழுதிய கதைதான். படப்பிடிப்பு ஜூலை 1ல் தொடங்கி டிசம்பர் வரை நடைபெறும்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறும்போது, “விஜய்யுடன் எனது முந்தைய படமான ’துப்பாக்கி’ படத்தைவிட இது இரண்டு மடங்கு சிறப்பாக இருக்கும்” என்றார்.
No comments:
Post a Comment