Sunday, June 21, 2015

ஒருநாள் தொடரை வென்று வங்கதேசம் சாதனை, மீண்டும் பணிந்தது இந்தியா:


முஸ்டாபிஸுர் ரஹ்மான் பந்துவீச்சில் மீண்டும் அசத்த, இந்தியா உடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது வங்கதேசம்.
 இந்தியா - வங்கதேசம் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள மிர்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 முதல் ஆட்டத்தில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்ட இந்திய அணி இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கியது. இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே, உமேஷ் யாதவ், மோஹித் சர்மா ஆகியோர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
 அவர்களுக்குப் பதிலாக அம்பாதி ராயுடு, அக்ஷர் படேல், தவல் குல்கர்னி ஆகியோர் களமிறங்கும் அணியில் சேர்க்கப்பட்டனர். எதிரணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். வழக்கம்போல் ரோஹித் சர்மாவும் ஷிகர் தவணும் இந்திய அணியின் பேட்டிங்கை தொடங்கினர்.
 ஆட்டத்தின் 2-ஆவது பந்திலேயே, ரோஹித் சர்மா, டக்-அவுட்டில் நடையைக் கட்டினார். இதன் பின்னர் விராட் கோலி தவணுடன் இணைந்தார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த வேகம் ஆட்டத்தில் இல்லை. தொடர்ந்து ஆடிய இந்த ஜோடியில், கோலி 23 ரன்களுடன் (27 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) விடைபெற்றார். நசீர் ஹுசைன் வீசிய 12.3-ஆவது ஓவரில் அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
 கோலி கடந்த 13 ஆட்டங்களில் ஒரே ஒரு முறைதான் 50 ரன்களை தாண்டியுள்ளார். இந்த ஆட்டத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு அவர் ரன் சேர்க்காததால் ஏமாற்றமே மிஞ்சியது. 
 2-ஆவது விக்கெட்டுக்கு தவண் - கோலி ஜோடி 74 ரன்கள் சேர்த்ததே இந்திய அணியின் பார்ட்னர்ஷிப்பில் அதிகபட்சமாக அமைந்தது.
 தோனி 47 ரன்கள்: இந்த முறை கேப்டன் தோனி முன்னதாக களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷிகர் தவண் 53 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ராஹானேவுக்குப் பதிலாக இறங்கிய ராயுடுவும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதன் பின்னர் கைகோத்த தோனி - ரெய்னா ஜோடி விக்கெட் சரிவை தடுப்பதிலேயே கவனம் செலுத்தியது.
 தோனி 47 ரன்களுடனும் (75 பந்து, 3 பவுண்டரி), ரெய்னா 34 ரன்களிலும் முஸ்டாபிஸுர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து ஆடிய இந்தியா 45-ஆவது ஓவரின் முடிவில் 200 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
 எதிரணி தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய முஸ்டாபிஸுர் ரஹ்மான் 10 ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நசீர் ஹுசைன், ரூபேல் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முன்னதாக 9-ஆவது ஓவர் முடிந்திருந்தபோதும், 43.5-ஆவது ஓவரின் போதும் மழை குறுக்கிட்டது. இதனால் "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 47 ஓவர்களில் 199 ரன்கள் வங்கதேசத்தின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 
 வங்கதேசம் வெற்றி: தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேச அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. குல்கர்னி வீசிய 1.2-ஆவது ஓவரில் ரன் கணக்கை தொடங்கும் முன் விராட் கோலியிடம் கேட்ச்சான தமீம் இக்பால் நடுவர்களின் கருணை பார்வையால் தப்பினார்.
 முதலிலேயே வேகப்பந்துவீச்சு எடுபடாததை அறிந்த தோனி 4-ஆவது ஓவரில் சுழற் பந்துவீச்சுக்கு வாய்ப்பு கொடுத்தார். 
 குல்கர்னி மறுபடியும் வீசிய 7-ஆவது ஓவரில் தமீம் (13 ரன்கள்) ஷிகர் தவணிடம் சிக்கினார். இதன் பின்னர் வந்த லிட்டன்தாஸும், சர்க்காருடன் இணைந்து சிறப்பாக ஆடினார். வங்கதேச பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த இந்திய அணி மிகவும் சிரமப்பட்டது. சர்க்கார் (34 ரன்கள்), லிட்டன் தாஸ் (36), முஷ்பிகுர் ரஹீம் (31), அனுபவ வீரரான தமீம் இக்பால் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் என வங்கதேசம், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 39-ஆவது ஓவரிலேயே 200 ரன்களை எளிதாக எட்டிப் பிடித்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை வங்கதேசம் வென்றுள்ளது. 
 ஏற்கெனவே டெஸ்ட் தரவரிசையில் சரிவை சந்தித்துள்ள இந்திய அணி, இந்த தோல்வியின் மூலம் ஒருநாள் ஆட்டத்துக்கான தரவரிசையிலும் சரிவை சந்திக்க உள்ளது. 
 கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் வருகிற புதன்கிழமை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.
யார் இந்த முஸ்டாபிஸுர்?
 இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் அறிமுகமான 19 வயதான முஸ்டாபிஸுர் ரஹ்மான் தனது முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்திலும் அவர் 6 விக்கெட்டுகளை எடுத்து புதிய பெருமையைப் பெற்றுள்ளார். அதாவது முதல் மற்றும் இரண்டாவது ஆட்டத்தில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளுக்கும் மேல் எடுத்துள்ளார். இதற்கு முன்னர் ஜிம்பாப்வேயின் பிரையன் விட்டோரி மட்டுமே இந்த சாதனைக்குரியவராக இருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரமாக ஜொலிக்கும் முஸ்டாபிஸுர், வங்கதேசத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர். 
 தான் இந்தளவுக்கு உயர்ந்ததற்கு தனது மூத்த சகோதரர்களே காரணம் என்று கூறியிருக்கும் அவர் இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்திலும் இதேபோன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 நழுவிய "ஹாட்ரிக்' வாய்ப்பு
 வங்கதேசத்தின் இளம் வீரர் முஸ்டாபிஸுர் ரஹ்மான் வீசிய 40-ஆவது ஓவரின் 3-ஆவது பந்தில் தோனி ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே அக்ஷர் படேலும் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முஸ்டாபிஸுருக்கு "ஹாட்ரிக்' விக்கெட் எடுக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் 9-ஆவது வீரராக களமிறங்கிய அஸ்வின் சுதாரித்து ஆடியதால் முஸ்டாபிஸுரின் "ஹாட்ரிக்' கனவு கலைந்தது. ஆனால் மறுபடியும் வீசிய ஓவரில் அஸ்வினின் விக்கெட்டை முஸ்டாபிஸுர் கைப்பற்றினார்.
 வங்கதேசத்தின் புதிய பெருமைகள்...
 *இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
 * 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஐசிசி தரவரிசையில் முதல் 8 அணிகளில் ஒன்றாக இடம்பிடித்து, 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆசியகோப்பை சாம்பியின்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளது.
 *சொந்த மண்ணில் வங்கதேச அணி ஒருநாள் ஆட்டத்தில் தொடர்ச்சியாகப் பெற்றுள்ள பத்தாவது வெற்றி இது

No comments:

Post a Comment