Sunday, June 21, 2015

புலி டீசர் திருட்டுத்தனமாக வெளியீடு: பயிற்சி உதவியாளர் கைது



விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் புலி. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் நேற்றிரவு வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது, இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 தேதி (நாளை) புலி படத்தின் டீசரை வெளியிட முடிவெடுத்தார்கள். இது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கியது.

ஆனால் இன்று (ஜூன் 21) மதியம் 12 மணியளவில் யூடியூப் வழியாக புலி படத்தின் டீசரை திருட்டுதனமாக வெளியாகியது. இதனால் புலி படக்குழுவும் தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் இருவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சட்டவிரோத செயலை செய்த மர்ம நபர் யார்?, டீசர் எங்கிருந்து எடுக்கப்பட்டது? என்று விசாரித்ததில் சென்னை வள்ளுவர் கோட்டம் ஃபோர் பிரேம்ஸ் எடிட்டிங் ஸ்டூடியோவில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக உறுதியானது. இதனால் இந்த வீடியோவை வெளியிட்ட நபரை போலீசார் பிடித்து கைது செய்துள்ளார்கள்.

இதுகுறித்து ஃபோர் பிரேம்ஸ் உரிமையாளர் இயக்குநர் ப்ரியதர்ஷன் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, ‘‘எனது நிறுவனத்தில் இண்டன்ஷிப்பில் பணிபுரிய வந்த எம்.எஸ்.மிதுன் என்பவர் இந்த சட்டவிரோத செயலை செய்திருப்பது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

மேனஜர் கல்யாணம் கூறும்போது, ‘‘இன்று இரவு 12 மணிக்கு வெளியாகவிருந்த புலி படத்தின் டீசர் சட்டவிரோதமாக வெளியானது தெரிந்தது. உடனே அலுவலகத்திற்கு விரைந்து வந்து இச்செயலை செய்த மிதுன் என்பவரை கைது செய்துள்ளோம். இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் காலங்களில் இந்த மாதிரி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம்’’ என்றார்.

தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் கூறும்போது, ‘‘விஜய் மற்றும் இயக்குநர் சிம்புதேவன் இணைந்து பிரமாண்டமாக உருவாகியிருக்கும் புலி படத்தின் டீசர் திருட்டுத்தனமாக வெளியானதால் எங்களது ஒட்டுமொத்த குழுவும் அதிருப்தியில் இருக்கிறோம். இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் இணைந்து பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் புலி படத்தை இப்படி யாரோ ஒரு முகம் தெரியாத ஒருத்தன் வெளியிடுவது கடுமையாக தண்டிக்கதக்கது. இப்படி ஒரு டீசர் வெளியானதால் எங்களுக்கு பெரிய பயம் எழுந்துள்ளது. பின்னாளில் படம் இப்படி வெளியானால் எங்கள் நிலைமை என்ன ஆகும். ஏற்கனவே , பாகுபலி போன்ற பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நட்சத்திரங்களின் படங்களை குறிவைத்து இந்த மாதிரி செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. இந்த மாதிரி செயல்களை எப்படியாவது எதிர்காலங்களில் தடுக்க வேண்டும் என்றார்.

இப்பிரச்சனையை கேள்விப்பட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் கதிரேசன் உடனே சம்பவ இடத்திற்கு வந்து புலி பட தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக நின்றார்.

No comments:

Post a Comment