Saturday, June 20, 2015

நடிகர் சங்கத்தில் நடப்பது என்ன ???..


சுமார் 3,500 திரைப்பட மற்றும் நாடக நடிகர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் தென்னிந்திய திரைப்ப்ட நடிகர் சங்கத்துக்கு தேர்தல் வரவிருக்கிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலிருந்து இதுவரை நடந்த எந்த ஒரு நடிகர் சங்க தேர்தலைச் சுற்றியும் இந்த அளவு பரபரப்பும், காரசார விவாதங்களும் அவதூறு சுமத்தல்களும் இருந்ததில்லை. இவ்வளவு ஊடக கவனமும் இருந்ததில்லை.
 இந்த முறை நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் ஒரு புறம் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக விஷால் தலைமையிலான அணி களமிறங்கியிருக்கிறது. இவ்வணி களங்கமிறங்கி இருக்கவில்லை என்றால் தற்போதைய நிர்வாகிகளே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் போட்டியிடும் அணியைச் சேர்ந்த விஷால், கார்த்தி, நாசர், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் பதவிக்கு வருவது தங்கள் நோக்கமில்லை என்றும் நிர்பந்தத்தால்தான் போட்டியிடுகிறோம் என்று ஒருமித்தக் குரலில் சொல்கிறார்கள். அப்படி என்ன நிர்பந்தம்?

18 கிரவுண்ட் நிலமும் பல்லாயிரம் பிரச்சனைகளும்
 நடிகர் சங்க வளாகத்துக்கு சொந்தமான 18 கிரவுண்ட் நிலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அதன் தலைவராக இருந்தபோது ரூ.40,000 கொடுத்து வாங்கப்பட்டது. இந்த நிலம் நடிகர் சங்க அறக்கட்டளைக்கு சொந்தமானது. அதில் நடிகர்களுக்கு பயன்படுத்துவதற்கான கட்டடம் கட்டுவதற்காகப் பெறப்பட்ட சில லட்சங்கள் சங்கத்தின் பெயரில் ரூ.4 கோடி கடனாக வளர்ந்தது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்தும் செயலாலராக சரத்குமாரும் இருந்தபோது அவர்கள் இருவரும் முயற்சித்து வெளிநாடுகளில் முன்னணி நடிகர்களை வைத்து கலை நிகழ்ச்சி நடத்தி அந்தக் கடனை அடைத்தார்கள்.
 இப்போது அந்த நிலத்தில் ஒரு கட்டடம் கட்டசங்கத்தின் தலைவராக இருக்கும் சரத்குமாரும் செயலாளராக இருக்கும் ராதாரவியும் போட்ட ஒப்பந்தம்தான் எதிர்ப்புவரக் காரணமாகியிருப்பதோடு நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடுமோ என்று அஞ்சுமளவுக்கு பிரச்சனையை பூதாகரமாக்கியிருக்கிறது.

சினிமா தியேட்டரா? கல்யாண மண்டபமா?
 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாத, சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோரின் முயற்சியால் ஸ்பை (சத்யம்) சினிமாஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். அதன்படி அந்த நிலத்தை ஸ்பை நிறுவனத்துக்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டு அதில் அந்நிறுவனம் கட்டும் திரையரங்கம் உள்ளிட்ட வணிக வளாகத்திலிருந்து வரும் வருமானத்தில் மாதம் ரூபாய் 26 லட்சத்தை சங்கத்துக்கு தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் கட்டடத்தின் தரைத்தளத்தில் 3500 சதுர அடியில் நடிகர் சங்கத்துக்கான அலுவலகம் எழுப்பிக்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  இதனால் அந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்ட மார்ச் 2011ல் இடிக்கப்பட்டது.
 ஆனால் இந்த ஒப்பந்தம் பல்வேறு சட்டச் சிக்கல்களில் சிக்கி உள்ளது. சங்கம் செயல்படும் ஹபிபுல்லா சாலையில் 7 பள்ளிகளும் சில தனியார் மருத்துவமனைகளும் இருக்கின்றன. எனவே அந்த இடத்தில் ஒரு வணிக வளாகம் வந்தால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அது பல்வேறு சிக்கல்களையும் ஆபத்துகளையும் கொண்டுவரும் என்ற அச்சத்தில் அங்கு வணிக வளாகம் கட்டப்படுவதை எதிர்த்து அருகாமையில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகமும் ஒரு குடியிருப்போர் நல சங்கமும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கின்றன. அதோடு நடிகர் சங்கத்தின் செய்ற்குழு உறுப்பினராக இருந்த பூச்சிமுருகன் இப்படி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டதில் சில தவறுகள் நடந்துள்ளன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது

 2013ல் நிலத்தில் கட்டட இடிபாடுகள் மட்டும் இருந்ததால் இவை குறித்து தெரிந்துகொண்ட விஷால், நாசர் உள்ளிட்ட நடிகர்கள் இது பற்றிக் கேள்வி எழுப்பினர். அப்போது சட்ட சிக்கல்கள் நிரம்பிய இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு கட்டடம் கட்டுவதற்கான மாற்றுவழிகளை யோசிக்கலாம் என்று யோசனை கூறியதாகச் சொல்கின்றனர். மேலும் நடிகர் சங்க நிலத்தில் நடிகர் சங்கமே ஒரு திருமண மண்டபம் கட்டிக்கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவையான பணத்துக்கு முன்னணியில் இருக்கும் இளம் நடிகர்கள் சம்பளம் வாங்காமல் படம் நடித்து அதன் மூலம் கிடைக்கும் வசூலை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
 ஆனால் 2013ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒப்பந்தத்தை எதிர்க்கும் வழக்குகள் மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று பொதுக் குழுவில் சரத்குமாரும் ராதாரவியும் உத்தரவாதம் அளித்ததாகவும் அதனால் தாங்கள் எதிர்ப்பைக் கைவிட்டதாகவும் கூறுகிறது விஷால் தரப்பு.
 2014ல் நடந்த பொதுக்குழுவின் போதும் பிரச்சனை தீராமல் எந்த கட்டடம் கட்ட முடியாத நிலை இப்போதுவரை தொடர்வதாலும் நிர்வாகிகள் அதற்கு முறையான பதில் சொல்லாததாலும்தான் தாங்கள் இப்போது தேர்தலில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறது விஷால் தரப்பு.
 மேலும் ஸ்பை நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும்கூட்டி கலந்துரையாடி அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி நடந்துகொள்ள சம்மதித்தால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளத் தயார் என்றும் இத்தரப்பு உறுதியளித்திருக்கிறது.
 ஆனால் ராதாரவி உள்ளிட்ட நடப்பு நிர்வாகிகளும் அவர்களது ஆதரவாளர்களும் ஒரு சிறு குழுவினரின் விருப்பத்துக்காக செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று வாதிடுகிறார்கள். மேலும் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பொதுக்குழு கூட்டங்களில் முறையாகப் பங்கேற்றதில்லை என்றும் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை என்று சொல்கிறார்கள்.
 சரத்குமார், ராதாராவி ஆகியோரின் தரப்பை ஆதரிப்பவர்கள் விஷால் போன்ற இளம் நடிகர்கள் ஆவேசமாகப் பேசுவதை நம்பி ஒப்பந்தத்தை ரத்து செய்தால் நலிந்த நடிகர்களுக்கு பயனளிக்கக் கூடிய கட்டடமே கிடைக்காமல் போவதற்கான அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார்கள்.

இடையில் சில அவதூறுகள்
 இவற்றுக்கிடையில் இருதரப்பினர் மீதும் சில அவதூறுகளையும் பரப்பப்டுகின்றன.
 சரத்குமார், ராதாரவி ஆகியோர் ஸ்பை நிறுவனத்துடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தால் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய தனிப்பட்ட ஆதாயத்தால்தான் அதை ரத்து செய்ய மறுக்கின்றனர் என்று குற்றச்சாட்டு கிளப்பபடுகிறது.
 மறுபுறம் சரத்குமார் அரசியல் கட்சித் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் ஆதரவாளர் என்பதால் எதிர்கட்சிகள்தான் விஷால் தரப்பினரை தூண்டிவிட்டு பிரச்சனை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது.




குமரிமுத்துவுக்கு ஒரு நியாயம் கே.என்.காளைக்கு ஒரு நியாயமா?

 நடிகர் சங்க நிர்வாகிகளையும் அவர்களால் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் பற்றி கேள்வி எழுப்பிய மூத்த நடிகர் குமரிமுத்து, சங்கம் குறித்து அவதூறுச் செய்திகள் பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 அதேவேளையில் மதுரையில் நாடக நடிகர்கள் கூட்டம் ஒன்றில் பேசும்போது விஷால் தரப்பினரைக் குறித்து இழிவான அவதூறு வார்த்தைகளை பிரயோகித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர்கள் ராதாரவி மற்றும் கே.என் காளை ஆகியோர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்புகிறது விஷால் தரப்பு.
 ஆனால் ராதாரவி, காளை ஆகியோர் தாங்கள் பேசியவற்றுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டதாகவும் குமரிமுத்து, ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோர் ஒப்பந்தத்தின் மூலம் தனிப்பட்ட ஆதாயம் பெற்றிருப்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக பொது இடத்தில் பேசியதற்காகவும் நடிகர் சங்க கூட்டம் நடக்கையில் அலைபேசியின் மூலம் வேறு ஒருவர் அங்கு பேசப்படுவதை ஒட்டுக்கேட்க வழிவகுத்ததாலும்தான் அவர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் ராதாரவி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

தேர்தல் நடக்குமா?
 நடிகர் சங்கத்துக்கான தேர்தல் ஜூலை 15 அன்று நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த அறிவிப்பை எதிர்த்து விஷால் தரப்பினர் நீதிமன்றம் நாடியிருக்கின்றனர். தேர்தலை திரைத்துறையினருக்கு விடுமுறை தினமான இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் நடத்தாமல் வார நாளான புதன்கிழமையில் நடத்துவதும், தேர்தலை ஒரு குறுகலான கட்டடத்தில் நடத்தவிருப்பதும் நடிகர்களை வாக்களிக்க வரவிடாமல் தடுப்பதற்கான உத்தி என்று விஷால் தரப்பு குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. மேலும் இந்த தேர்தல் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அத்தரப்பின் மனுவில் கோரப்பட்டுள்ளது.
 ஆனால் இதற்கு முன்பு நடிகர் சங்க தேர்தல்கள் வார நாட்களிலும் நடந்திருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமைதான் தேர்தல் நடத்த வேண்டும் என்று விதி இல்லை என்றும் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இருதரப்பினருமே நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவதாகக் கூறியுள்ளனர்.

எதிர்காலம் என்ன?
 சரத்குமார், ராதாரவி உள்ளிட தற்போதைய நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் வெற்றி தங்கள் பக்கம்தான் என்றும் உறுதியாக நம்புகின்றனர்.
 இந்த கட்டட பிரச்சனையையும் நடிகர் சங்கம் முன் உள்ள மேலும் பல பிரச்ச்னைகளையும் நடப்பு நிர்வாகிகள் முறையாகத் தீர்க்காததால்தான் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறியிருக்கும் விஷால், நாசர் உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வியுற்றாலும் அதற்குத் தலைவணங்கி ஒரு எதிர்கட்சிபோல் சங்கம் தொடர்பான பிரச்சனைகளுக்காகக் குரலெழுப்புவோம் என்று கூறியுள்ளனர்.
 தற்போதைய தலைவர் சரத்குமார், நடிகர் சங்கத்தின் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்ததில் முக்கியப் பங்காற்றியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ராதாரவியும் சங்கத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருப்பவர். எனவே இவர்களால் சங்கத்துக்கு நன்மைகள் விளையும் என்று நம்பலாம். ஆனால் அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் நிர்வாகப் பதவியில் இருக்க கூடாது என்று எஸ்.வி.சேகர் போன்ற மூத்த உறுப்பினர்கள் எழுப்பும் குரல் புறம்தள்ளத்தக்கதல்ல. முன்பு தலைவராக இருந்த விஜய்காந்த் சங்கப் பதவியிலிருந்து அரசியல் கட்சி தொடகங்யபின் எஸ்.வி.சேகரின் கோரிக்கையின்படி சங்கப் பதவியிலிருந்து விலகிவிட்டார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
 மேலும் தற்போதைய நிர்வாகிகள் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் கட்டடம் கட்டுவது தொடர்பான சட்டச் சிக்கல்கள் பற்றி அனைத்து உறுப்பினர்களுக்கு மீண்டும் விளக்கி சந்தேகங்களைப் போக்கிவிட்டால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
 மறுபுறம் இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஷால், கார்த்தி போன்றோர் சங்கத்தின் நிர்வாகப் பதவிகளுக்கு வந்தால் அவர்களால் தொடர்சசியாக படங்களிலும் நடித்துக்கொண்டு சங்கத்தின் பணிகளையும் கவனித்துக்கொள்வது மிகக் கடினமானதாகிவிடும். இதனால் படப்பிடிப்பு திட்டங்கள் பாதிக்கப்பட்டு திரைத்துறையின் பல்வேறு பிரிவினரும் பாதிக்கப்படுவர் என்று இந்த இளம் நடிகர்களுக்கு நெருக்கமான சிலர் கருதுகின்றனர்.
 அரசியல் கட்சியிலும் இல்லாமல் பல்வேறு படங்களில் நடிக்கும் நிலையிலும் இல்லாத, நடிகர் சிவகுமாரைப் போன்ற மூத்த நடிகர்களை பதவிக்கு அமர்த்தி இளம் நடிகர்கள் பின்னணியில் இருந்து ஆதரிப்பதே அனைவருக்கும் நலம்பயப்பதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment