Monday, June 15, 2015

ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் சதம்: நியூஸிலாந்து இங்கிலாந்தை வீழ்த்தியது


சவுத்தாம்டன், ரோஸ் பவுலில் நடைபெற்ற 3-வது ஓரு நாள் போட்டியில் 302 ரன்கள் குவித்த இங்கிலாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பேட் செய்ய முடிவெடுக்க இங்கிலாந்து 302 ரன்களுக்கு 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி ராஸ் டெய்லர் (110), கேன் வில்லியம்சன் (118) ஆகியோரது சதங்கள் உதவியுடன் 49 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தோல்விக்குப் பிரதான காரணம் 42-வது ஓவரில் 288/5 என்ற வலுவான நிலையிலிருந்து 46-வது ஓவரில் 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததே. சவுத்தி, வீலர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, ஹென்றி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சதம் அடித்த கேன் வில்லியம்சன், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 71 ரன்களில் இருந்த போது பவுல்டு செய்தார். இதனால் ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 32 ஓவர்களில் 206 ரன்களைச் சேர்த்த போது வெற்றிக்கு 67 பந்துகளில் 61 ரன்கள் என்று சுலபமாக மாறிவிட்டது. 

ராஸ் டெய்லர் இதோடு 3-வது முறையாக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் சதம் கண்டுள்ளார். 206 ரன்கள் என்பது 3-வது விக்கெட்டுக்கான புதிய நியூஸி. சாதனையாகும். 1984-ம் ஆண்டு ஜெஃப் ஹோவர்த், மார்ட்டின் குரோவ் 3-வது விக்கெட் சாதனையை வில்லியம்சன், டெய்லர் ஜோடி முறியடித்தது. 

இங்கிலாந்து பேட்டிங்கில் கடைசியில் மடமடவென 5 விக்கெட்டுகளை இழந்து சில ஓவர்களை பயன்படுத்த முடியாமல் போனதும், நியூஸிலாந்து இன்னிங்ஸில் 4 வாய்ப்புகளை தவறவிட்டதும், தோல்விக்கு காரணமாயின. 67 மற்றும் 72 ரன்களில் ராஸ் டெய்லருக்கு பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர். வில்லியம்சன் சதம் கடந்த பிறகு 109 ரன்களில் மார்க் உட் கோட்டை விட்டார்.

வில்லியம்சன் 113 பந்துகளில் 12 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 118 ரன்கள் எடுக்க டெய்லர் 123 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்தார். முன்னதாக கப்தில் 2 ரன்களிலும், மெக்கல்லம் 11 ரன்களிலும் வெளியேறினர்.

இங்கிலாந்து இன்னிங்ஸில் ஜோ ரூட் 54 ரன்களையும், மீண்டும் மோர்கன் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 71 ரன்களையும் விளாசினர். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 105 ரன்களைச் சேர்த்தனர். 

பென் ஸ்டோக்ஸ் அபாரமான அதிரடியை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 68 ரன்களை எடுத்தார். பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பில்லிங்ஸ் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இவர் அவுட் முதல் சரிவு தொடங்கியது. 288/5 லிருந்து 302 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து. 

மொத்தத்தில் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லரின் அனாயசமான பேட்டிங்கினால் 303 ரன்கள் இலக்கு ஒன்றுமேயில்லாமல் போனது.

No comments:

Post a Comment