Tuesday, June 16, 2015

சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வருகிறது!


இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியுடன் இலங்கை நட்சத்திர விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் குமார் சங்கக்காரா ஓய்வு பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சங்கக்கார இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதாகவும், இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆகியவற்றில் பங்கேற்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆகஸ்ட் 18-ம் தேதி கால்லேயில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. தற்போது சங்கக்காரா ஓய்வு அறிவிப்பதால் இந்த டெஸ்ட் போட்டி சங்கக்காராவின் சொந்த ஊரான கண்டிக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. 

உலகக் கோப்பை முடிந்தவுடனேயே அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவிப்பதாக இருந்தா சங்கக்காரா, ஆனால் ஓய்வு முடிவை தள்ளி வைக்குமாறு அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக தெரிவித்திருந்தார். 

12,203 டெஸ்ட் ரன்களை 58.66 என்ற சராசரியின் கீழ் பெற்றுள்ள சங்கக்காரா, 38 சதங்கள் எடுத்துள்ளார். அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த இலங்கை வீரர் என்ற பெருமையுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.

சச்சின், லாரா போலவே, 8,000, 9000, 10,000, 11,000, 12,0000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை இவர் வேகமாக எடுத்துள்ளார். அதாவது இன்னிங்ஸ்கள் அளவில் வேகமாக எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment