சிறிய பசிபிக் தீவு அணியான குவாம் அணிக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது.

பிஃபா தரவரிசையில் இந்தியாவைக் காட்டிலும் 33 இடங்கள் பின் தங்கியுள்ள அணி குவாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனில் சேத்ரி கடைசி நிமிடத்தில் ஆறுதல் கோலை அடித்தார். குவாம் அணியில் 38-வது நிமிடத்தில் பிராண்டன் மெக்டோனல்ட் மற்றும் 62-வது நிமிடத்தில் டிரேவிஸ் நிக்லா ஆகியோர் 2 கோல்களை அடித்தனர்.

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றுகளில் குவாம் அணி பெறும் 2-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தகுதிச் சுற்றுப் போட்டியில் முன்னதாக துருக்மெனிஸ்தான் அணியை 1-0 என்று குவாம் வீழ்த்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

38-வது நிமிட குவாம் அணியின் கோல் குறிப்பிடத்தகுந்தது ஏனெனில் ரயான் கய் என்பவர் அளித்த நீண்ட த்ரோவை மெக்டோனல்ட் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். 62-வது நிமிடத்தில் நிக்லா, தனது சகவீரரும், சகோதரருமான ஷான் அளித்த நீண்ட பாஸை கோலாக மாற்றினார்.

தரவரிசையில் 141-ம் இடத்தில் இருக்கும் இந்திய கால்பந்து அணி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ஓமன் அணிக்கு எதிராக இதே போல் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.

குவாம் என்பது அமெரிக்காவின் மேற்குப் பசிபிக் தீவுப் பகுதியாகும். இதன் மக்கள் தொகை 2 லட்சத்துக்கும் சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு குவாம் அணி தற்போது பங்கேற்கிறது.

2000-ம் ஆண்டு தகுதி சுற்றுப் போட்டிகளில் ஈரானுக்கு எதிராக 19-0 என்றும் பிறகு தாஜிகிஸ்தான் அணிக்கு எதிராக 16-0 என்றும் குவாம் அணி தோல்வி தழுவியது.