இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதினை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச தலைநகர் போபாலைச் சேர்ந்த வி.கே.நஸ்வாஹ் என்பவர் அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த சச்சின் டெண்டுல்கருக்கு மத்திய அரசு உயரிய குடிமகன்களுக்கு வழங்கப்படும் பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவித்தது.
ஆனால் சச்சின் அந்த கௌரவத்தைப் பயன்படுத்தி வியாபார பொருட்களை மக்களிடையே விளம்பரப்படுத்தி பணம் சம்பாதித்து வருகிறார். இது உயரிய குடிமகனுக்குரிய விருதின் கண்ணியம், மரபு மற்றும் நெறிகளுக்கு முரணானதாகும்.
எனவே தார்மீக அடிப்படையில், சச்சின் தனக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய விருதை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்படி அவர் செய்யாவிட்டால் மத்திய அரசு அந்த விருதினை திரும்பப் பெற வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு முதன்மை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் மற்றும் நீதிபதி கே.கே.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பாரத ரத்னா விருது பெற்றவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை என உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்து ஒருவார காலத்திற்குள் பதிலளிக்குமாறு துணை தலைமை வழக்குரைஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment