Saturday, June 20, 2015

கெளதமியின் நடிப்பைப் பார்த்து குற்ற உணர்வு ஏற்பட்டது: கமல்ஹாசன்


அறிவுறுத்தல் இல்லாமலேயே இரு சக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கசவம் அணிவது அவசியம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். 
 மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "த்ரிஷ்யம்.' இந்தப் படம் "பாபநாசம்' என்ற பெயரில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப் தமிழ்ப் பதிப்பையும் இயக்கியுள்ளார்.
 இந்தப் படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
 இதில் கமல்ஹாசன் பேசியது:
 தலைக்கவசம் அணிவதை அறிவுரையாகச் சொல்லும் அவலம் வந்திருப்பதுதான் இங்கே ஆச்சரியமான விஷயம். எந்த அறிவுறுத்தலும் இல்லாமல் தலைக்கவசம் அணிவது அவசியம் என மக்கள் உணர வேண்டும். செருப்பு போட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிவது போல, தலைக்கவசம் அணிவதன் அவசியமும் தெரிந்திருக்க வேண்டாமா? 
 "பாபநாசம்' படத்தை ஏதோ நான் மட்டும் ஒற்றை ஆளாக நின்று செய்து காட்டியது போன்ற பிரமை உங்களுக்கெல்லாம் ஏற்பட்டு இருக்கலாம். சினிமா ஒரு ஜனரஞ்சகமான கலை மட்டுமல்ல. ஜனநாயகம் மிகுந்த கலையும் கூட. அதைத் தனியாக ஒரு நபர் செய்வதெல்லாம் இங்கே நடக்காது. நட்சத்திர அந்தஸ்து எங்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதால் ஏதோ ஒரு பாத்திரம் கொண்டு செய்யும் சமையல் என்று நினைக்கிறார்கள். பல பாத்திரங்கள் கொண்டு செய்யப்படும் கலைதான் சமையல். 
 என் ஆரம்ப கால படங்களில் எல்லாம் நான் ஏற்று நடித்த பாத்திரங்களைத்தான் ரசிகர்கள் நினைவு வைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் ஒவ்வொரு நடிகரின் பாத்திரத்தின் பெயரைச் சொல்லி குறிப்பிடும் நிலை இருந்தது. 
 இந்தப் படத்திலும் நடிகர்கள் அப்படித்தான் நினைவில் வைத்துக் கொள்ளப்படுவார்கள். "பாபநாசம்' படத்தின் கதையை மூன்று மொழிகளில் ஒத்திகை பார்த்து வெற்றி என்று ஊர்ஜிதமும் செய்து எங்கள் கைகளில் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. 
 நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதமி இதில் நடித்திருக்கிறார். படத்தில் அவரின் நடிப்பை பார்த்த பின் ஒரு நல்ல நடிகையை வீட்டிலேயே வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது என்றார் கமல்ஹான்.
 இந்தச் சந்திப்பின்போது நடிகை கௌதமி, நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட "பாபநாசம்' படக்குழுவினர் உடனிருந்தனர். 
 

No comments:

Post a Comment