குமார் சங்கக்கார இன்னும் ஒரு இரட்டைச் சதம் பெற்றால், அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிராட்மனின் சாதனையை முறியடித்தவராக சாதனை படைப்பார்.
இலங்கை கிரிக்கெட் அணியை உலகளவில் தலை நிமிர வைத்தவர்களில் மிகமுக்கியமானவர் சங்கக்கார என்றால் அது மிகையாகாது. அந்த அணிக்காக நீண்ட நாட்களாக விளையாடி வரும் அவர், இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் விடை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் சபையிடம் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டிலும் விளையாடி விட்டு ஓய்வு பெறுவதாக சங்கக்கார தெரிவித்துள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை கூடுகிறது. அப்போது இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கவுண்ட்டி அணியான சர்ரே அணியில் விளையாடுவதற்காக இவர் ஒப்பந்தமாகியுள்ளார். 37 வயதாகும் குமார் சங்கக்கார இதுவரை 130 டெஸ்ட் போட்டிகளில் 12203 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திலும், சர்வதேச அளவில் 5-ஆவது இடத்திலும் உள்ளார். 38 சதங்களும் பெற்றுள்ளார். 11 இரட்டை சதங்கள் பெற்றுள்ள அவர் இன்னும் ஒரு இரட்டை சதம் பெற்றால் பிராட்மனின் சாதனையை முறியடிப்பார்.
No comments:
Post a Comment