Monday, June 15, 2015

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த நீதி மன்றம்!


தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
 அதே நேரத்தில், மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு வருகிற 22-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு நடிகர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 இது தொடர்பாக நடிகர்கள் விஷால் கிருஷ்ணா, நாசர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தென்னிந்திய நடிகர்கள் சங்கம் 1952-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 6 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். நாங்களும் இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளோம். 
 சங்க விதிப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும். விதிப்படி, தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த ஒரு தேர்தல் அதிகாரி, இரண்டு உதவித் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
 2015 - 18-ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை மாதம் 15-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும் என தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கடந்த 5-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். 
 வார நாள்களில் பெரும்பாலான நடிகர்கள் பணியில் இருப்பார்கள். சினிமா சங்கங்கள் தொடர்பான தேர்தலை, கட்டாய விடுமுறை நாளான இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடத்த வேண்டும்.
 வடபழனி பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. வார நாள்களில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க வரும் நடிகர்களுக்கு சிரமம் ஏற்படும். கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில தகுதியுள்ள வேட்புமனுக்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. 
 தேர்தல் நடைமுறை ஏதும் பின்பற்றப்படாமல் சங்க நிர்வாகிகள் அவசர அவசரமாகத் தேர்வு செய்யப்பட்டனர். இப்போதும் தேர்தல் அதிகாரியை தன்னிச்சையாக சங்க நிர்வாகிகள் நியமித்துள்ளனர். அதனால் இந்தத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வாய்ப்பில்லை. எனவே, இந்தத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். 
 தேர்தல் தொடர்பான அறிவிப்பை செல்லாது என அறிவிக்க வேண்டும். தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, விடுமுறை நாளில்தான் தேர்தலை நடத்த வேண்டும் என விதிகள் ஏதும் இல்லை. அதனால், தேர்தலுக்கு தடை விதிக்க அவசியம் இலை என நீதிபதி தெரிவித்தார்.
 இதைத் தொடர்ந்து ஜூன் 22-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சங்கத்துக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார். 
 

No comments:

Post a Comment